எம் ஜி ஆர் படத்துடன் பாரதிய ஜனதா கொடி. அதிமுக எதிர்ப்பு

எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பாரதிய ஜனதா விளம்பரத்தில் பயன்படுத்தியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் மத்திய  பாஜக இடம் பெற்றிருந்தாலும் அவ்வப்போது எழும் கருத்துக்கள் புகைச்சலை ஏற்படுத்துவது வழக்கம்.. அந்த வகையில் தற்போது அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். படத்துடன் பாஜக விளம்பரம் செய்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த மாதம் 6-ம் தேதி பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதற்கான விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமோடா’ என்ற வரிகள் ஒலிக்க, பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து  அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில் – ‘’ எம்.ஜி,ஆர் அனைத்து மக்களும் போற்றும் தலைவர் தான். ஆனால் பிற கட்சிகள் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் எம்.ஜி.ஆரை போன்று நல்லது செய்து மக்களிடம் பிரதமர் மோடி ஆதரவு பெற்று வருகிறது என்பதைத்தான் அவை உணர்த்துவதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவிக்கிறார்.

ஆட்சியில் நீடிப்பதற்காக பாஜகவிடம் பவ்வியம் காட்டும் அதிமுக தற்போது எம்.ஜி,.ஆரையும் விட்டுக்கொடுத்து விட்டதா அல்லது எம்.ஜி.ஆரையும் பாஜக தட்டிப்பறித்து விட்டதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பாரதிய ஜனதா விளம்பரத்தில் பயன்படுத்தியிருப்பதுஅதிமுக கூட்டணியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page