December 2, 2021 3:58 pm

காதலியை கைவிட்டு வேறு பெண்ணுடன் நிச்சயம் . போராடி கரம் பிடித்த பெங்களூர் காதலி. குமரியில் சினிமாவை மிஞ்சும் ருசிகரம் .

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை என்ற இடத்தை  சேர்ந்தவர் தினேஷ்.(29). இவர் பெங்களூரில் ஒரு பிரபல ஜவுளி கடையில் வேலை செய்து  வந்தார். அதே கடையில் பெங்களூரை சேர்ந்த கவிதா(25) என்ற பெண்   வேலை பார்த்து  வந்துள்ளார். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை  செய்ததால்  ஏற்பட்ட பழக்கம் நாளடைவில்  உயிர் காதலாக  மாறியுள்ளது. இவர்களது   காதல்  விவகாரம் இரு தரப்பு  பெற்றோர்களுக்கும் தெரிய  வந்தபோது, இரு  வீட்டினரும்  கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இந்த  நிலையில்  கடந்த  மாதம்  அவசரமாக தினேஷ்  சொந்த ஊரான வெள்ளிச்சந்தை  வந்துள்ளார். உடனடியாக தினேஷின் பெற்றோர் கருங்கல் பகுதியை  சேர்ந்த உறவுக்கார பெண்  ஒருவரை நிச்சயித்து, திருமண ஏற்பாடுகளை  தீவிரப்படுத்தியுள்ளனர். திருமண  நாளை  முடிவு  செய்து, அழைப்பிதழ்களை விநியோகித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெங்களூரில்  உள்ள கவிதாவுக்கு  தெரிய  வந்துள்ளது. உடனடியாக அவர்  தினேஷை  செல்போனில் தொடர்பு  கொண்டுள்ளார். ஆனால் தினேஷ்  கவிதாவின் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. உயிருக்குயிரான காதலன் தன்னை  கை  விட்டு விடுவார் என  பயந்த கவிதா  கடந்த இரண்டு  தினம்  முன்பு பெங்களூரில்  இருந்து  தனியாக புறப்பட்டு கன்னியாகுமரி  மாவட்டம் வந்துள்ளார். வெள்ளிசந்தைக்கு போக தெரியாமல்  கவிதா  திணறியுள்ளார்.  காதலனை தொடர்பு  கொள்ளவும்  முடியாத  நிலை  ஏற்பட்டுள்ளது.

இருப்பினும்  மனம்  தளராத  கவிதா குளச்சல் மகளிர்  போலீசில் புகார் செய்துள்ளார். மகளிர் சப்- இன்ஸ்பெக்டர் அனிதா இருவரின்  பெற்றோருக்கும்  தகவல்  தெரிவித்துள்ளார். இதில்  பெங்களூர்  கவிதாவின்  பெற்றோர் மகளை  ஏற்க போவதில்லை என  தெரிவித்தனர். இதையடுத்து தினேசும், அவரது  பெற்றோரும்  போலீஸ்  நிலையம் வந்தனர். கவிதாவை கண்ட தினேஷ் கண்ணீர் விட்டு அழுதார்.  தொடர்ந்து போலீசார்  தினேஷிடம் நடத்திய விசாரணையில்.-  தனது  பெற்றோரால்  உறவுக்கார  பெண்ணை திருமணம்  செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டதாக தினேஷ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து  போலீசார் தினேஷின்  பெற்றோரிடம் பேச்சுவார்த்தை  நடத்தினார்கள். முடிவில் உறவு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை  நிறுத்துவது  எனவும், ஊர்  கோவிலில்  உடன் கவிதா – தினேஷ்  திருமணத்தை நடத்துவது  எனவும், முடிவு  செய்யப்பட்டது. தொடர்ந்து  தினேஷின்  பெற்றோர்  கவிதாவை அவர்கள்  வீட்டிற்கு மருமகளாக அழைத்து சென்றனர். சினிமாவில் நடப்பது போல் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page