குடிக்க பணம் கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை நள்ளிரவில் வெட்டிக் கொன்ற கணவன்

 

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் மன்னாவிளை பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவரது மகள் மீனா (வயது34). இவருக்கும், களியக்காவிளையை அடுத்த பாறசாலை அயிரா சூரக்குழி பகுதியை சேர்ந்த ஷாஜி (42) என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது.

இவர்களுக்கு ஷாரோன், ஷான் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஷாரோன் 10-ம் வகுப்பும், ஷான் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். மரம் வெட்டும் தொழிலாளியான ஷாஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கும் அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வரும் ஷாஜியை மனைவி மீனா கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வாறு தகராறு நடக்கும் போது தன்னை தாக்கியதாக களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் மனைவி மீனா பலமுறை புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் கணவன்- மனைவி இருவரையும் வரவழைத்து போலீசார் சமரசம் பேசி மீண்டும் அனுப்பி வைத்தபடி இருந்துள்ளனர். இந்நிலையில் மீனா தனது வீட்டை சீரமைக்க வங்கியிலிருந்து கடன் பெற்று வைத்திருந்தார். அந்த பணத்தை மது குடிக்க தருமாறு கேட்டு ஷாஜி நேற்று இரவு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் மீனா, ‘‘பிள்ளைகள் வளர்ந்து விட்டனர், நாம் வீடு இல்லாமல் அவதிப்படுகிறோம், எனவே இந்த பணத்தை நான் குடிக்க கொடுக்க மாட்டேன்’’ என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஆத்திரமடைந்த ஷாஜி, மரம்வெட்ட பயன்படுத்தும் பெரிய வெட்டுக்கத்தியால் மனைவி மீனாவின் தலை, முகம், கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மீனா, துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

பின்னர் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த மகன்களை எழுப்பி, ‘‘உங்களின் அம்மாவை வெட்டிக்கொலை செய்து விட்டேன். நான் போலீஸ் நிலையத்தில் சரண்டர் ஆக போகிறேன்’’ என்று கூறிவிட்டு பாறசாலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய் மீனாவின் உடலை பார்த்து மகன்கள் இருவரும் கதறி அழுதனர்.

அவர்கள் அழுதது அங்கு திரண்டு நின்ற அக்கம் பக்கத்தினரை கண்கலங்க செய்தது. கடன் வாங்கிய பணத்தை மது குடிக்க தராத ஆத்திரத்தில் மனைவியை தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page