ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் கருங்கலில் வாகன சோதனையில் போலீசில் சிக்கினார்.
குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி மேற்பார்வையில் கருங்கல் காவல் ஆய்வாளர் தங்கராஜ், கருங்கல் எஸ்.ஐ. மோகன அய்யர், தனிப்படை எஸ்.ஐ. ஜாண்போஸ்கோ மற்றும் போலீசார் கருங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த பைக்கை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த கருங்கல் போலீசார் தனிப்படை போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மேக்காமண்டபம் ஈத்தவிளையை சேர்ந்த ஜாண் என்பவர் மகன் ஜஸ்டின்ராஜ் (21) என்பதும், இவர் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்திருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் கூடைப்பந்து விளையாட்டில் யூனிவர்சிட்டி பிளேயர் என்பதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், இவர் ஆன் லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். முதலில் சிறு தொகை லாபமாக கிடைத்துள்ளது. இதனால் இவர் ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமை ஆகி உள்ளார். லாபத்தை கருதி விளையாட்டில் இறங்கிய இவருக்கு போக போக ரூபாய் 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே இவர் வீட்டில் இருந்து சிறு தொகைகளையும், வீட்டு உபயோக பொருட்களை திருடி விற்றும் ஆன் லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு உள்ளார். இதனால் வீட்டில் உள்ளோருக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
இதனால் வெறுப்படைந்த இவர் ஆன் லைன் ரம்மி விளையாடுவதற்கு தேவையான பணத்திற்காக தனது நண்பருடன் சேர்ந்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார். அதில் கிடைத்த பணம் மூலம் ரம்மி விளையாடி உள்ளார். இதனை கேட்ட போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இவர் மீது கருங்கல், இரணியல், திருவட்டார் காவல் நிலையங்களில் செயின் பறிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் பல்வேறு செயின் பறிப்பு முயற்சி சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேற்படி நபரிடமிருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 10 பவுன் நகை மீட்கப்பட்டது. செயின் பறிப்பு சம்பவங்களில் பயன்படுத்திய பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவரது செயல்களுக்கு துணையாக இருந்த அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்த பட்டதாரி வாலிபர் ஆன் லைன் ரம்மியால் தன் வாழ்க்கையை தொலைத்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு பிடிபட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.