தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகத் தமிழ்த் தொண்டாற்றுபவர்களுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் குமரி ஆதவனுக்கு தமிழக முதலமைச்சர் திருமிகு எடப்பாடி பழனிச்சாமியால் வழங்கப்பட்டது.
கடந்த முப்பது வருடங்களாக தனது பேச்சு, எழுத்து மூலம் தமிழ்த்தொண்டாற்றி வருபவர் குமரி ஆதவன். தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். குமரிமாவட்டத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் ஜெஸ்டின் பிரான்சிஸ் என்பதாகும். மணலிக்கரையில் உள்ள புனித மரிய கொரட்டி மேல்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழின் மேல் கொண்ட ஆர்வத்தால் ஓய்வு நேரங்களில் தமிழுக்கும் தொண்டாற்றி வருகிறார். இவர் ஆகஸ்ட் மாதம் 4, 1970ம் ஆண்டு பிறந்தார். இவர் மேடை பேச்சுகளிலும் பட்டி மன்ற பேச்சுகளிலும் மேடை நாடகங்களிலும் சிறந்து விளங்குபவர்.


மனிதனாக வா என்ற விழிப்புணர்வு ஒலி நாடாவிற்கும் இராக தீபம் என்னும் பாரத நாட்டிய ஒலி நாடாவிற்கும் பாடல்களை எழுதியுள்ள இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடக மேடைகளில் நடித்துள்ளார். கருத்தரங்க மேடைகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் பங்கேற்றுள்ளார்.
1989 ஆம் ஆண்டு கல்லூரி மாணவராக இருந்த போதே அமுதசுரபி இலக்கிய இயக்கத்தை நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பித்து அடுத்த தலைமுறை பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்கி வருபவர். இவ்வமைப்பு நூலகம் ஒன்றையும் கொற்றிகோடு கிராமத்தில் அமைத்து மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை உருவாக்கி வருகிறது.
2009 ஆம் ஆண்டு ‘இலக்கியப் பட்டறை’ என்ற அமைப்பை நிறுவி மாதம் தோறும் சிறந்த அறிஞர்கள், படைப்பாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு இலக்கியப் பயிற்சியளித்து சிறந்த படைப்பாளர்களை உருவாக்கவும் அவர்களது நல்ல தமிழ் நூல்களை வெளியீடு செய்தும் வருகிறார்.
கடந்த முப்பது ஆண்டுகளாக ஆயிரத்துக்கு மேற்பட்ட கருத்தரங்குகளில் பங்கேற்று தமிழ் மொழி மற்றும் வரலாறு சார்ந்த உரைகளை நிகழ்த்தியுள்ளார். சாலமன் பாப்பையா, நெல்லை கண்ணன், லியோனி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல்வேறு நடுவர்களுடன் ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டிமன்றங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பேசியுள்ளார்.
தான் கணித ஆசிரியராகப் பணி செய்யும் புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியிலும் இலக்கிய மன்றத்தின் பொறுப்பேற்று இலக்கிய மலர்கள், மாணவர் தென்றல் காலாண்டிதழ் வெளியிட்டு மாணவர்களைப் படைப்பாளர்களாக உருவாக்கியுள்ளார்.

இவரது படைப்புகளை பல மாணவ மாணவிகள் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் விருதுநகர் மக்களால் தோற்கடிக்க பட்டு, பின்னர் குமரி மாவட்டம் நாகர்கோயில் தொகுதி மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதை பற்றி, அப்பச்சி தேர்தல் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை எழுதியுள்ளார் . அழிந்து வரும் கிராமிய விளையாட்டுகள், மண்ணும் கலையும், உலக மொழிகளின் தாய் தமிழே, சிலம்பில் அறம், உடைந்து சிதறும் குடும்ப உறவுகள், குழதைகளின் எதிரிகள் என்பன போன்ற ஏராளம் ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.