December 2, 2021 4:02 pm

கேரளாவில் 10 ஆண்டுகளாக வீட்டின் அறையில் காதலியை மறைத்துவைத்த காதலன்

 

கேரளாவில் 10 ஆண்டுகளாக தங்கள் வீட்டிலுள்ள அறையில் காதலியை, காதலன் மறைத்துவைத்த செயல் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இதில் நடந்தது என்ன என்று விரிவாக பார்ப்போம்?

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ரஹ்மான், தன் காதலியான சஜிதாவை 10 ஆண்டுகளாக வீட்டிலுள்ள தனது அறையில் குடும்பத்தினருக்கே தெரியாமல் மறைத்து வைத்திருந்த செயல் அதிர்ச்சியை உருவாக்கியது. எப்படி கடந்த 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருக்க முடிந்தது என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

10 ஆண்டுகளாக எப்படி மறைத்து வைத்திருந்தேன் என்பதை விளக்குகிறார் ரஹ்மான். “சஜிதா கழிவறைக்குச் செல்ல இரவில் மட்டுமே அறையில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே செல்வார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், நான்தான் மருந்துகளை வாங்கித்தருவேன். சஜிதா அறையில் சுற்றி நடப்பாள், ஹெட்செட்டைப் பயன்படுத்தி டிவி பார்ப்பாள், இரவில் நடைபயிற்சிக்கு மட்டுமே ஜன்னல் வழியாக வெளியே செல்வாள்” எனத் தெரிவித்தார், இதனை சஜிதாவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் ரஹ்மானின் பெற்றோர் முகமது கரீம் மற்றும் ஆதிகா தங்கள் மகன் பொய் சொன்னதாக குற்றம்சாட்டியுள்ளனர்.இது தொடர்பாக பேசிய அவர்கள் ” நாங்கள் ஒரே வீட்டில் இருக்கிறோம். ஆனால் 10 ஆண்டுகளாக எங்களுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை, அது எப்படி சாத்தியம்?. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டு கூரையில் சில பழுதுபார்க்கும் பணிகள் இருந்தபோது, நாங்கள் ஒரு முறை மட்டும் அந்த அறைக்குள் நுழைந்தோம். ஆனால் அப்போது சஜிதாவை காணவில்லை” எனத் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ரஹ்மான், “ அந்த பராமரிப்பு பணி நடந்தபோது ஒரு மரப் பலகையின் அடியில் சஜிதா ஒளிந்திருந்தார்” எனத் தெரிவித்தார்.

அது முழுவதுமாக கட்டப்பட்ட கான்கிரீட் வீடு இல்லை, ஓட்டுவீடுதான். வீட்டின் சுவர்கள் மேல்கூரையை தொடாது, எனவே சிறிய சத்தமாக இருந்தாலும் கேட்கும் என ரஹ்மானின் பெற்றோர்கள் தெரிவித்தனர். இவர்களைத் தவிர, அந்த வீட்டில் ரஹ்மானின் சகோதரி, அவரது மகளும் வசித்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய கேரள மகளிர் ஆணையத் தலைவர் எம்.சி. ஜோசபின், ஊரடங்கு முடிந்த பின்னர் தம்பதியினரை சந்திக்கப் போவதாகவும், அவர்களின் கதை குறித்து கவலைப்படுவதாகவும் கூறினார். “இந்த வழக்கில் சில மர்மங்கள் உள்ளன. நாங்கள் நென்மாரா காவல் நிலையத்தில் இருந்து ஒரு அறிக்கையை கேட்டுள்ளோம். பத்து ஆண்டுகளாக ஒரு பெண்ணை அடைத்து வைத்ததில் குற்றவியல் கூறு உள்ளது. அவர்கள் ஒன்றாக வாழ அனுமதித்த நீதிமன்றத்தின் முடிவு நியாயமானது.ஆனால் பத்து ஆண்டுகளின் மர்மம் அவிழ்க்கப்பட வேண்டும், “என்று அவர் மேலும் கூறினார்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பெண் ஒருவர் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து மாயமாகி உள்ளார். தற்போது அவரது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் காதலனுடன் வசித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் அவரது காதலனின் பெற்றோருக்கே அந்த பெண் வீட்டில் இருப்பது தெரியாமல் இருவரும் ரகசியம் காத்துள்ளனர்.

கடந்த 2010-ல் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆயலூர் கிராமத்தை சேர்ந்த அந்த பெண் தனது வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். அவர் மயமானதை தொடர்ந்து போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர் அந்த பெண்ணின் பெற்றோர். அதைத்தொடர்ந்து போலீசாரும் விசாரணை நடத்தி உள்ளனர். இருப்பினும் அதற்கு எந்த பலனும் இல்லை.

2010 முதல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை அந்த பெண் காதலனின் வீட்டில் இருந்த அறையில் இருந்துள்ளார். அறையில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் யாருக்கும் தெரியாமல் காதலன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் அந்த பெண். அதே நாளன்று காதலனும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். தொடர்ந்து காதலனின் பெற்றோர் தங்கள் மகனை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண்ணும், காதலனும் பக்கத்து ஊரில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனை தற்செயலாக கவனித்த காதலனின் சகோதரர் இருவரையும் பிடித்து விசாரித்ததில் 11 ஆண்டுகளாக வீட்டில் ரகசியமாக வாழ்ந்தது அம்பலாமாகி உள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் தாங்கள் காதலித்ததை ரகசியமாக வைத்துள்ளனர்.

நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரும் சேர்ந்து வாழ அனுமதி கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page