January 16, 2022 3:36 pm

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் திரு. எஸ். ரமேஷன் நாயருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் திரு. எஸ். ரமேஷன் நாயருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது

தக்கலையை அடுத்த குமாரபுரத்தில் மே 3, 1948 இல் பிறந்த கவிஞர் ரமேஷன் நாயர் 18-6-2021 அன்று தனது 73 வது வயதில் கொரோனா காரணமாக நம்மை விட்டு பிரிந்து விட்டார்.

கவிஞர் அவர்கள் மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர். ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மியூசிக் படித்தார். இந்து கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மனைவி ரெமா, மகன் மனு ரமேஷன் மலையாள திரைப்பட இசையமைப்பாளர்.
கவிஞரின் முதல் கவிதை நூல் “கன்னிப் பூக்கள்” 1966 இல் வெளியாகியது.

அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். எழுத்து ஆர்வம் காரணமாக விருப்ப ஓய்வு பெற்று தீவிர இலக்கிய பணியில் இறங்கினார். சுமார் 50 புத்தகங்களை மலையாள இலக்கியத்திற்குத் தந்தவர். 1985 இல் ” பத்தாமுதயம்” திரைப்படத்தில் நான்கு பாடல்கள் எழுதி திரையுலகிற்கு அறிமுகமானார். புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான கே. வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன் இசைக்கு துவக்க காலத்தில் பாடல்கள் எழுதினார். பின்னர் மலையாளத்தின் அத்தனை இசையமைப்பாளர்களோடும் தன் கவிதைகளோடு பயணித்தார். இளையராஜா இசைக்கு பாடல்கள் எழுதியது மறக்கமுடியாத அனுபவம் என்பார். இதுவரை 165 திரைப்படங்களில் 650 க்கு அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். 2000 க்கு மேற்பட்ட பக்தி பாடல்கள் எழுதியுள்ளார். தனி ஆல்பங்களில் சுமார் 800 பாடல்கள் வந்துள்ளன.

சிலப்பதிகரம், திருக்குறள், பாரதியார் பாடல்களை மலையாளத்திற்கு மொழி பெயர்த்தார். அதற்காக கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் (1-1-2000) அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் பாராட்டும் பரிசும் பெற்றார். கலைஞரோடு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக தொடர்ந்து கலைஞரின் “தென்பாண்டி சிங்கம்” நூலையும் மலையாளத்தில் மொழி பெயர்த்தார்.

இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய அகாதமி விருதை 2018 இல் ‘குருபவுர்ணமி” நூலுக்காகவும், கேரள அரசின் மாநில விருதையும், சிறந்த திரைப்பட பாடலுக்காக விருதையும், பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய விருதுகளையும் பெற்றவர். கவிஞருக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்ட போது, பத்திரிகை நேர்காணலில், “கன்னியாகுமரி மாவட்டத்தின்ற மலையாளமாணு என்ற மலையாளம். ஆ மலையாளம் ஜெயிச்சது எனிக்கு வளர சந்தோசமாயி” என்று கூறினார். அதோடு தான் இளமையிலேயே சுமந்து திரிந்த நாராயண குருவின் கதையை காவியமாக்கிய நூலுக்கு விருது பெற்றதன் மூலம் நாராயண குருவின் புகழும், நான் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழும் இந்தியா முழுவதும் அறியப்படும் என்று கூறி மகிழ்ந்தார்.

விவேகானந்தர் குறித்த காவியத்தை எழுதத் தொடங்கியிருந்தார். கம்பராமாயணம் மலையாள மொழி பெயர்ப்பு பணியையும் தொடங்கியிருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஜுன் 18 அன்று இறந்தார்.

அவருக்கு அவர் பிறந்த குமாரபுரம் வீட்டு அருகாமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி அமுதசுரபி இலக்கிய இயக்கம், கன்னியாகுமரி மலையாள அட்சரலோகம் அமைப்புகள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர். நிகழ்வுக்கு அட்சரலோகம் அமைப்பின் செயலாளர் திரு. ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையேற்றார். கவிஞர் குமரி ஆதவன் நினைவேந்தலுரை வழங்கினார். ஒய்.என். எஸ். எஸ் அமைப்பின் பொறுப்பாளர்கள் திரு. அனில் குமார், திரு. அனூப், திரு. கோபால கிருஷ்ணன், சிபிஎம் குமாரபுரம் கிளைச் செயலாளர் திரு. சுரேஷ் குமார், குமரேசன், வணிகர் சங்கம் சார்பில் திரு. பாகுலேயன் மற்றும் ஊர் பொது மக்கள் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page