வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரும், இதற்கு உடந்தையாக இருந்த ஒரு பெண்ணும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகளான அந்த சிறுமி, அருகிலுள்ள பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்து வருகிறார். அவரது தாய் வேதாரண்யம் கடைவீதியில் உள்ள ஓர உணவகத்தில் வேலை செய்து வந்தார். தாய் வேலைக்குச் செல்ல முடியாத நேரத்தில், அவருக்குப் பதிலாக அந்தச் சிறுமி உணவகத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தக் கடையின் உரிமையாளர் சண்முகசுந்தரம் என்பவர், தனிமையைப் பயன்படுத்தி அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் சொல்ல அச்சப்பட்டுக் கொண்டு, வீட்டருகே உள்ள அரவிந்தன் என்பவரின் மனைவி துர்காதேவியிடம், கடை முதலாளி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதைக் கூறியிருக்கிறார். இதனை துர்காதேவி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அதே தெருவில் வசிக்கும் அ.தி.மு.க பிரமுகர் விஜயன் என்பவரிடம் கூறி இருக்கிறார். இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்ட விஜயன், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த துர்காதேவியின் கணவர் அரவிந்தனும் அந்தச் சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்கிறார்கள்.
இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மலர்கொடி போக்சோ சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விஜயன், அரவிந்தன், துர்காதேவி ஆகிய மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். ஆனால், முதல் குற்றவாளியான சண்முகசுந்தரத்தின் சகோதரர் காவல்துறையில் பணியாற்றுவதாகவும், அதனால் அவரைக் கைது செய்யவில்லை என்றும் ஒரு செய்தி பரவியது.
இதுபற்றி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்கொடியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம். “அது தவறான தகவல். தவறு செய்த யாரையும் யாருக்காகவும் விடமாட்டோம். அந்த அப்பாவிப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் மிகவும் கொடுமையானது.
போக்சோ சட்டத்திற்கு சாட்சியே தேவையில்லை. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வாக்குமூலம்தான் முக்கியம். அதனை வைத்துதான் முதலில் விஜயன், அரவிந்தன், துர்காதேவி மூவரையும் கைது செய்தோம். தலைமறைவாகி இருந்த சண்முகசுந்தரத்தை இன்று கைது செய்துள்ளோம்” என்றார்.