January 16, 2022 3:10 pm

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் தேவ பிரசன்னம் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கடந்த 2 ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து கோயிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள்  பத்மாநாபபுரம்  சப் – கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதையடுத்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலில் தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வந்தது.
        கேரள மாநிலம் வயநாடை  சேர்ந்த சோதிடர்  ஸ்ரீநாத் மற்றும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தேவ பிரசன்னம் பார்க்க தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இன்று காலை மண்டைக்காடு கோயில் வந்து தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியை தொடங்கினர்.
        முன்னதாக பாறசாலை ராஜேஷ் போற்றி சிறப்பு கணபதி ஹோமம் நடத்தினார். தேவபிரசன்னம் பார்த்து எடுக்கும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும் என்பதால் பக்தர்கள் மண்டைக்காடு கோயில் முன்பு திரளாக குவிந்தனர். கொரோனா ஊரடங்கால் அவர்களில் அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் தமிழக இந்து கோயில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேக பாபு, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரர், முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  கோயில் தந்திரி சங்கர நாராயணன், குமரி மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சிவகுற்றாலம், தேவசம் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் ரெத்னவேல் பாண்டியன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் ஐயப்பன், ஆய்வாளர் கோபாலன், கோயில் மேலாளர் ஆறுமுகதரன், மாவட்ட பா.ஜ.தலைவர் தர்மராஜ், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேலாயுதம், ஆஸ்டின், மாவட்ட தி.மு.க.செயலாளர் சுரேஷ்ராஜன், பேரூராட்சி முன்னாள் தலைவர் மகேஸ்வரி முருகேசன், நாகர்கோவில் மாநகர்மன்ற முன்னாள் தலைவர் மீனாதேவ் மற்றும் மாவட்ட இந்து கோயில்களின் கூட்டமைப்பு, இந்து முன்னணி, ஹைந்தவ சேவா சங்கம், தேவி சேவா சங்கம், பெரிய சக்கர தீவெட்டி முன்னேற்றக்குழு ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், பக்தர்கள்  கலந்து கொண்டனர்.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடந்த தீ விபத்திற்கு பின் இன்று  கோயிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு வருவதையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தேவ பிரன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, –
மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயில் கடலோரத்தில் இருக்கும் கோயிலாகும். இது தேவியின் பிரதான கோயில். இந்த கோயில் உருவாகும் முன்பு மேற்கே சாஸ்தா கோயில் மூல கோயிலாகும். இந்த 2 கோயில்களுக்கும் தொடர்பு உண்டு. இந்த கோயிலில் பகவதியம்மன் மட்டுமல்ல, பிற தேவதைகளும் உண்டு. இது ரத்த காயத்தினால் வெளிப்பட்ட சுயம்பு மூலவர் கொண்ட கோயில். தேவிக்கு அதிக சக்தி உள்ளது. அந்த சக்தியை புரியாமல் கோயில் நிர்வாகம் – பக்தர்கள் இடையே விரோத மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. அதனால் பிரச்சினைகள் நடந்து வருகிறது. அம்மனுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் சுத்தமாக இல்லை. சுத்தமான குடிநீர் இல்லை. இங்கு தீ விபத்து ஏற்படும் முன்பே ஏற்கனவே புற்றில் கேடு ஏற்பட்டது. அதை சுத்தமான சந்தனத்தால் நிவர்த்தி செய்ய வேண்டும். இங்கு பூஜை காரணங்கள் முறையாக நடக்கவில்லை. யாராவது நல்ல காரியம் செய்ய வந்தாலும் தடை செய்கிறார்கள். கோயில் அசுத்தமாக உள்ளது. கோயிலுக்குள் வியாபாரம் நடக்கிறது. கோயிலை சுற்றி நாக நடமாட்டம் அதிகமாக உள்ளது. கோயிலில் லட்சார்ச்சனை, திரு விழா பூஜைகள், பக்தர்களால் நடத்தப்படும் பூஜைகள், அன்னதானம் போன்றவை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும். கோயிலில் வேத ஜெபம் இல்லை. மந்திர ஜெபம் செய்வதில்லை. முன்பு மாசிக்கொடையின் போது நடந்த ஒரு பூஜை சடங்கு சமீப காலமாக நடத்தப்படவில்லை. கோயிலில் ஆச்சார்ய அனுஷ்டானங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
      மேலும் கூறுகையில்.- கோயில் ஸ்ரீ சக்கரத்திற்கு பூஜைகள் நடக்கவில்லை.கோயில் கல்வி சம்பந்தமான கோயில். தற்போது கோயிலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் நலிந்து உள்ளது.கோயிலை சீரமைத்தால் கல்வி நிறுவனங்கள் மேம்படும்.சுத்தமான சந்தனத்தால்தான் பூஜைகள் நடத்த வேண்டும். இந்த கோயில் ஆண் குழந்தை வேண்டுதல் தலம் ஆகும். முன்னாள் இங்கு பிராமணர்கள் பூஜை செய்தனர். இப்போது பூஜை சடங்குகள் சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. நித்திய பூஜைகளும் ஒழுங்காக நடக்கவில்லை. அம்மனுக்கு நைவேத்திய பூஜை முடிப்பதற்கு முன்பு நைவேத்தியம் பிரசாதம் வழங்குகின்றனர்.கோயில் புற்று வளர்கிறது. வாஸ்து படி கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும். கோயில் உயரம் ஏற்கனவே 2 முறை உயர்த்தப்பட்டது. இப்போது 3 வது முறை உயர்த்த வேண்டும். இதற்கு அறிகுறிதான் கடந்த தீ விபத்து. கோயிலுக்குள் தரமான நெய் தீபம் ஏற்ற வேண்டும். கோயிலின் வடக்கே 40 ஏக்கர் கோயில் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
      2 வது நாளாக நாளையும் (செவ்வாய்க்கிழமை)தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று நடக்கும் தேவ பிரசன்னத்தில் பரிகார பூஜைக்கான விபரங்கள் தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page