October 25, 2021 4:18 am

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் சீரமைப்பு பணிக்கு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு அமைச்சர் சேகர் பாபு தகவல்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் சீரமைப்பு பணிக்கு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயிலில் கடந்த 2 ம் தேதி கருவறை மேற்கூரை தீ பிடித்து எரிந்த சம்பவம் பக்தர்களுக்கு பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியது மட்டுமல்லாமல்  மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த 3 வது நாளே தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் மண்டைக்காடு வந்து தீ விபத்து ஏற்பட்ட கோயிலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தற்போது கோயிலில் தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணி பத்மநாபபுரம் சப் – கலெக்டர் சிவகுரு பிராபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று மீண்டும் மண்டைக்காடு வந்து கோயிலை பார்வையிட்டு கோயிலில்  நடந்து வரும் தேவ பிரசன்னம் நிகழ்ச்சியையும்    பார்வையிட்டார். இதில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.ஆஸ்டின், கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சுரேஷ் ராஜன், கலெக்டர் அவிந்த், சப் – கலெக்டர் சிவகுரு பிரபாகரன், எஸ்.பி.பத்ரி நாராயணன்,அறங்காவல் குழு தலைவர் சிவ குற்றாலம், திருக்கோவில் நிர்வாக இணை ஆணையர் செல்வராஜ், தாசில்தார் பாண்டியம்மாள், தேவசம் மராமத்து பொறியாளர் ஐயப்பன், கோயில் மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு  நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த 2 ம் தேதி இங்கு கோவில் மேற்கூரை தீ பிடித்த தகவல் அறிந்ததும் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரும் விரைந்து வந்து தீயை அணைக்க உதவினர்.உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் மனோ தங்கராஜ்,கலெக்டர், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.4 ம் தேதி நானும் இங்கு வந்து ஆய்வு செய்தேன். தற்காலிகமாக பிளாஸ்டிக்கில் தார்ப்பாள் போடப்பட்டது. அதிலும் வெல்டிங் பொறி பட்டு தீ பிடிக்காமலிருக்க ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் ஆகம விதிப்படி சீரமைக்க கேட்டுக்கொண்டதை அடுத்து தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நாளை செவ்வாய் கிழமை 2 வது நாளாக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கும். தேவ பிரசன்னத்தில் கூறப்படும் கருத்துக்களை ஏற்று சாத்தியப்பட்ட பணிகள் செய்து முடிக்கப்படும். மேற்கூரை பணிக்கு ரூ.50 லட்சமும், தீயணைப்பு மற்றும் மராமத்து பணிகளுக்கு ரூ.35 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பக்தர்களின் மனம் புண் படாமல் வழிபாட்டிற்கு விரைந்து முடிக்கப்படும்.

கோயில் திருப்பணிகள் முடியும் வரை நான் அடிக்கடி நேரில் வந்து ஆய்வு செய்வேன். தீ விபத்திற்கான காரணம் கண்டறிய கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 4 பேர் கொண்ட குழு 8 பேரிடம் முதற்கட்ட விசாரணை முடித்து உள்ளது. ஒரு சில பிரச்சினைகள் உள்ளது. அஜாக்கிரதையால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பணி மற்றும் தேவ பிரசன்னம் பணிகள் முடிந்த பின்தான் முழுமையான விசாரணை அறிக்கை வரும். அதில் கோயில் பணியாளர்களின் தவறுகள் தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலத்தில் தீயணைப்பு தெளிப்பான் போன்ற கருவிகள் அமைக்கப்படும். அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் கொள்கைப்படி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளிக்க இந்து அறநிலையத்துறை தயாராக உள்ளது. இரணியல் அரண்மனை சீரமைப்பது தொடர்பாக நான் அடுத்த முறை வரும்போது எம்.பி.யுடன் சென்று பார்வையிடுவேன்
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page